Saturday, December 24, 2011

தொலைபேசி கட்டணம்



தினமும் தொலைபேசியில், 


மணிக்கணக்கில் மருகி,


உரையாடலில் உருகி,


காதலித்தேன், காத்திருந்தேன்,


தவறாமல் வந்தது அவள் அல்ல,


தொலைபேசி கட்டணம்!!!!!

Friday, December 23, 2011

தினம் ஒரு சுனாமி

"என்னங்க என்னையும், குழந்தைகளையும் வெளியில் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, இப்படி தூங்கறீங்களே" - சங்கீதாவின் குரலில் கொஞ்சலும், கோபமும் கலந்தே இருந்தன.


"என்னடி இன்னைக்கு கூட சீக்கிரமே எழுந்து, ம்ம்ம்ம்.... போடி"   - தோய்ந்து போன குரலில் படுக்கையை விட்டு எழுந்தான் ராஜேஷ்.


தூக்க கலக்கத்திலும், நேற்று மனைவியிடம் சொன்னதை நினைத்து பார்த்தான், என்னதான் சோம்பலாக இருந்தாலும், விடுமுறை நாளன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியில் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து, அவர்களின் சந்தோஷத்தில் சுகம் காண்பதே எல்லா கணவன்மார்களின் ஏக்கம். 


சட்டென்று கிளம்பி, அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள். முடித்த கையுடன் திரைப்படம் செல்லலாம் என்று மனைவி சொல்ல, மறுக்க மனம் இல்லாமல், "போலாம்டா செல்லம்" என்று அங்கே ஒரு மூன்று  மணிநேரம் கழித்தார்கள். 


பின்பு வீட்டுக்குத்தான் போகிறோம் என்ற நினைப்பில் ராஜேஷ் இருக்க, சங்கீதா தனக்கே உண்டான பாணியில், "ஏங்க கொஞ்சம் ஷாபிங் போயிட்டு போலாமே என்று இழுக்க" வண்டி நேராக கடைதெருவில் போய்நின்றது.


மாலை 6 மணிக்கு கடைக்கு உள்ளே சென்றவர்கள், இரவு வீட்டின் கதவில் சாவியை நுழைக்க மணி பதினொன்றை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. 


சரி வாங்க எனக்கு செம உடம்பு வலி, நான் தூங்க போறேன் - சங்கீதா சொல்ல.. குழந்தைகள் பாதி தூக்கத்தில் இருக்க. ராஜேஷ் மட்டும் பேனாவையும்,பேப்பரையும் எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே உட்கார்ந்து கணக்கு போட தொடங்கினான்.


ஆம், அன்றைய கடைதெருவில், ராஜேஷின் கிரெடிட் கார்டு அவ்வளவு தேய்ந்ததை எண்ணி, அதன் கணக்கு விவரங்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு மாதம் இவ்வளவு என்று தனது பட்ஜெட்டை முடித்து இரவின் மடியில் உறங்க....


எழுந்திறீங்க, மணி ஏழு. தனது இயந்திர வாழ்க்கைக்கு தயாரானான் ராஜேஷ்.
பரபரப்பான் அலுவலகம், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சம்பளத்தின் முக்கால் பகுதி கிரெடிட் கார்டின் தேய்மான செலவுக்கே போய்க்கொண்டிருந்தது.


மணி ஒன்று, மதிய உணவை காண்டீனில் முடித்து விட்டு, தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான், அன்று ஜப்பானில் சுனாமி தாக்கியதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்க.. ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்டான். 


திடிரென்று ஒரு குரல், ராஜேஷ் சார், "உங்கள மேனேஜர் வர சொன்னார்", சொல்லி விட்டு ஆபீஸ் பாய் போக.


ஆம், ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்ட ராஜேஷ், தனக்காக பரிதாபப்பட்டான். அடுத்த மாத செலவுகளை நினைத்து, ஆம், வேலை பறிபோன சோகத்துடன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல். நிலைக்குலைந்தான். 


ஆம், நண்பர்களே. சுனாமி தினமும் எங்கே ஒரு இளைஞனை தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது,  Recession, financial crisis, economy down இப்படி இன்னும் பல ஆங்கில வார்த்தைகளால் உலாவருகிறது. 


இன்று இது போன்ற சம்பவங்கள் இயற்கையே, அனால் இதை சமாளிக்க அனைவரும் செய்யக்கூடிய விஷயம் முடிந்த அளவு கிரெடிட் கார்டு என்னும் மோகத்தை உதறினால், எறும்பை போல் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூட சேமிப்பை வைத்து சுகமாக வாழலாம். 


இந்த வேலை போனா, அடுத்த ரெண்டு மாசத்துல இன்னொரு வேலை கிடைக்காதா என்ன?????!!!!!

Wednesday, December 21, 2011

மறதியில் ஒரு உதவி

மனித சமுதாயத்தில் நடக்கும் ஒரு எதார்த்த சம்பவத்தையும், மனித மறதிகளையும் கதையாக இங்கே தொகுக்கவிருக்கிறேன்...

அது மதுரை ரயில்நிலையம், எப்பொழுதும் கூட்ட நெரிசலில் பயணிகள் அங்கும் இங்கும் அலைந்த படியே காட்சி தரும் மிகவும் பரபரப்பான ரயில்நிலையம். 
ஒரு மதிய நேரம், செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ஒரு ரயிலில் இருந்து பயணிகள் வெளியில் சென்றுக்கொண்டிருந்தனர்.  ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை மும்மரமாக நடந்துக்கொண்டிருந்த சமயம், அதில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் மதிய உணவுக்காக வெளியே சென்றுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு குரல், "தம்பி, ரெண்டு, மூணு அரிசி மூட்டை இருக்கு, கண்ணு மங்களா தெரியுது, தூக்கவும் முடியல தம்பி.... யாராவது கூலி ஆளுங்க இருந்தா வர சொல்லு தம்பி, பணம் கூட குடுத்தறேன்" என்று சொல்ல...

அந்த பொறியாளர்,"அய்யா இங்கயே இருங்க, இங்க யாரும் இருக்க மாட்டாங்க, ரயில் நிலையம் முன்னாடி இருப்பாங்க வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

திடிரென்று ஒரு குரல்,  "என்ன சார் எப்பிடி வேலை எல்லாம் போகுது, எப்ப முடியும்? சீக்கிரம் முடிக்கணும் சார், அடுத்த மாதம் அமைச்சர் வராரு கண்காணிப்பு கேமராவ திறந்துவைக்க..... என்ன புரியுதா என்று சொல்லிவிட்டு போகிறார் அந்த ரயில்வே அதிகாரி.

பொறியாளரின் மனநிலை முற்றிலும் வேலை பற்றியே சிந்திக்க தொடங்க, எப்படி முடிக்கலாம், இன்னும் ஒரு மாத காலத்தில் எப்படியாவது முடிக்கவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் முடியுமா? இல்லை என்றால் நமது பெயர் கெட்டு விடுமே!! அலுவலகத்தில் நமக்கு கெட்ட பெயர் வந்து விடுமே, வீண் பலி சுமக்க வேண்டியதாகிவிடுமே.. ஒரு வேளை வேலை பறிபோய் விட்டால்,என்ன ஆகும்.... ஐயோ," இல்ல என்னால் முடியும், கண்டிப்பாக அடுத்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் நுழைக்கிறான். அளவு சாப்பாடு ஒன்று சொல்லி விட்டு, கை கழுவி விட்டு அமைதியாக உட்க்கார்ந்து திட்ட மிடுகிறான் வேலை நிமித்தமாக....

கிட்ட தட்ட, ஒன்றரை மணிநேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது, திடிரென்று அந்த வயதானவரின் ஞாபகம் வருகிறது, என்ன செய்வது என்று தெரியாமல், பாதி சாப்பாட்டில் எழுந்து மிக வேகமாக ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகிறான். அந்த வயதான முதியவரை அங்கே காணவில்லை, உதவி என்பது தக்க சமயத்தில் கிடைக்கா விட்டால் அந்த உதவிக்கே பயன் இல்லை, தான் அறியாமல் செய்த தவறை நினைத்து நொந்து, ஒரு பத்து நிமிடம், அங்கே இருக்கும் இருக்கையில் அமர்ந்து முதியவர் பற்றி யோசிக்கிறான். அவர் எப்படி போயிருப்பார்? யாராவது உதவி செய்திருப்பார்களா? இல்லை இங்கேயே இருக்கிறாரா என்று சுற்றும், முற்றும் பார்க்கிறான், அவர் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. மிகவும் நொந்து துவண்ட போன மனதுடன் வெளியில் செல்கிறான்.

அப்பொழுது ஒரு குரல்,"கொஞ்சம் நில்லு சாமி, செங்கோட்டை போகணும் சாமி, இந்த ரெண்டு மூட்டைய கொண்டு வந்து குடு, உனக்கு பணம் குடுக்குறேன் என்று அந்த வயதான மூதாட்டி சொல்ல... மிக மன நிறைவுடன் அணைத்து மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு, அந்த மூதாட்டியையும் அழைத்துக்கொண்டு, ஒரு இருக்கையில் அவரை அமரசொல்லி விட்டு, தண்ணீர் பாட்டில் ஒன்று அவரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வர... பச்சை கோடி பறக்க, ரயில் அதன் இலக்கை நோக்கி பயணிக்க.... இவனும் இலக்கை அடைந்த நிம்மதியுடன் நடை போடுகிறான்....

Thursday, July 21, 2011

காட்சி பொருள்



முகம் தெரியாத மனிதன்,
பழக்கம் இல்லாத மனிதர்கள்,
பார்த்திடாத இடம்,

மெழுகு சிலையை போல்,
காட்சி பொருளாக்கி,
விலை நிர்னைக்கப்பட,

வந்தவனின் இஷ்டம் கேட்டு,
நின்றவளை கஷ்டப்படுத்தி,
ஜீவ சமாதி நடக்க,

மூன்று ஜான் கைற்றில்,
மூன்று நிமிடம் முடிவதற்குள்,
முடிந்து போகும் அவளின் வாழ்க்கை,

நாகரீக வளர்ச்சி தேடி ஓடும் மானிடா,
உனது நாகரீகத்தை சரி செய்துவிட்டு,
தேடு... உனது தேடல் கிடைக்கும்........



Tuesday, May 10, 2011

கீற்றும் காலமும்

கீற்றுவில் கிறுக்க ஒருவன் பிறந்தான் - இறந்த காலம்,

கீற்றுவில் கிறுக்க கிறுக்கிக்கொண்டிருக்கிறான் - நிகழ் காலம்,

கீற்றுவில் தன் கிறுக்கல்களை பதிந்து இவன் கவிஞன் ஆவான் - எதிர் காலம்!!!

பறிகொடுத்தவன்

ஒற்றை ரூபாயை,
பறிகொடுத்த சோகத்தில்,
ஒருவன் - பிணம்....

Saturday, May 7, 2011

கருப்பு நிலா



கருப்பு ஆடைக்கொண்டு,
கருப்பு நிலாவை மூடியது ஏன்,
இருந்தும் பௌர்ணமியாய் மின்னுகிறது,
அவள் கண்கள்,

கண் இமைக்கும் நேரத்தில்,
கடைக்கண்களை காட்டி,
களவாடி போனாலே என்னை,

கலாச்சாரம் என்னும் கைற்றில்,
அடிமாடாய் கட்டுப்பட்டு,
முகம் மூடி நிற்கிறாயே,

உன் ஆசை முகம் பார்க்க,
ஆசையாய் வந்த எனக்காக,
கருப்பு நிலாவின்(உன்) முகம் காட்டுவாயா???

அமிர்தம்

அமிர்தம் சுவைக்க ஆசைப்பட்டேன்,
இதோ ஆசை நிறைவேறியது,
என்னவள் வந்த பிறகு!!! 

Thursday, May 5, 2011

யுத்தம்


கத்தியின்றி,
இரத்தமின்றி,
யுத்தம் செய்தேன்,

ஆம் காதல் செய்தேன்!!!

ஒற்றை தாமரை


காய்ந்த இந்த புல்களுக்கு நடுவில்,
எப்படி இந்த ஒற்றை தாமரை,
ஓ, ஒருவேளை என்னவளின்,
கால்தடம் பதிந்த இடமாக இருக்குமோ!


Tuesday, May 3, 2011

கல்யாணத்திற்கு பின் நண்பர்களுக்குள் பிரிவு ஏன்?



ஒரு சிறிய அலசல்.

ஆம் நண்பர்களே, இது ஒரு விவாதிக்க கூடிய, பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான நிகழ்வு தான். முதலில் நண்பர்கள் - யார் இவர்கள்? எப்படி அனைவரது வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத சொந்தமாக இருக்கிறார்கள்.
நட்பு என்றால் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு என்னதான் இருக்கிறது? ரத்தசொந்தத்தை விட அவ்வளவு மேலோங்கிய விஷயமா இந்த நட்பு என்பது? இப்படி பல பல கேள்விகள் நம்முள் எழுந்துக்கொண்டே இருந்து தான் வருகிறது... சரி பார்ப்போம்.

நண்பன் :-

"டேய் ஷங்கர் பென்சில் கொண்டு வரல டா, உன் கிட்ட இருக்கா" - இப்படி ஒன்றாம் வகுப்பில் அறிமுகம் ஆகும் நண்பன்,

"டேய் ஷங்கர், பொண்ணுக்கு எப்படியோ கல்யாணத்த முடிச்சிட்டேன். பையனுக்கும் இந்த வருஷம் முடிச்சிட்டா, என்னோட கடமை முடியும்டா" - இப்படி இறுதி நாட்கள் வரை தொடரும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன்.
இந்த இரண்டு காலக்கட்டத்திற்குள் எத்தனை எத்தனை பாசம், நேசம், பரிவு, பிரிவு, சண்டை, கோபம், காதல் கலந்துரையாடல், ஐயோ சொல்லிக்கொண்டே போகலாம் நாம் அனைவரும் அனுபவித்த ஆராயந்துப்பார்க்க முடியாத விஷயங்கள்(சந்தோஷங்கள்).

ஆம், அனைவரது வாழ்விலும் நிச்சயம் உங்கள் சோகத்தில் முழுமையாக பங்குப்பெற்றவன் நண்பனாகவே இருப்பான்.  அப்படி பட்ட நண்பன் என்பவன் எப்படி சிறிது காலம் தனிமை படுத்தப்படுகிறான். அந்த தனிமையால் எப்படி இன்னொருவன்(இவனும் நண்பனே) தவிக்கிறான். இதுவும் ஒரு இயல்பாக நிகழும் காலத்தின் மாற்றமே. 
இதற்க்கு காரணக்கர்தா ஒன்றே ஒன்று தான்.

காதலும் கல்யாணமும் :-

பெண் - இவர்களுக்கு இப்படி ஒரு சக்தியா என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா. இப்படி பட்ட உறவை கூட இவர்கள் நினைத்தால் கண்டிப்பாக தவுடு பொடியாய் ஆக்கிவிடலாம் என்று. 

ஆண் - இவன் நிச்சயம் ஒரு கோமாளி ஆக்கப்படுகிறான் காதல் என்னும் கரையை கடக்கும் பொழுது. இல்லை என்று சொல்வோர், கண்டிப்பாக பொய் அதிகம் பேசுபவர்களாக இருக்க கூடும். எனக்கு தெரிந்து நண்பர்கள் பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் என்றால் முதலில் வந்து நிற்பது "ஒரு பெண்ணுடன் பழகும் பொழுது தான்", காதல் என்று வந்தால் சுத்தம் கண்டிப்பாக மறைக்கப்படும்.
இது அவர்களின் தவுறு இல்லை, அறியாமை தான் எங்கே இவளை பற்றி, நம் நண்பர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ? எதுக்கு டா இந்த காதல் கத்திரிக்காய் என்று எல்லாம் கேலி செய்வார்களோ என்று ஒரு பயம்? இப்படி பல பல சிந்தனைக்குள் தள்ள படுகிறான், பின்பு அதுவே மறைக்கப்படுவதற்கு முதல் படியாய் நின்று விடுகிறது.
ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மறைக்கப்பட்ட காதலுக்கும், காதலிக்கும் எதாவது பிரிச்சனை என்றால் இவன் முதலில் நாடுவது நண்பர்களை தான். இப்ப மட்டும் எப்படி தான் நண்பர்கள் கண்ணுக்கு தெரிவாங்களோ?  அது போகட்டும், இந்த காதலை கல்யாணம் என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் போது தான், இந்த நண்பர்கள் கூட்டம் உள்ளே வரும். வந்த பிறகு ஒரு வழியாக எப்படியோ பெற்றவர்களின் சம்மதத்தோடோ, இல்ல அவர்களை எதிர்த்தோ, இல்லை அவர்களின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தியோ கல்யாணம் நடந்து முடிகிறது. 

இனி தான் நம் தலைப்பின் கருவுக்குள் வந்திருக்கிறோம், ஆம் கல்யாணத்திற்கு பின் நண்பர்கள் ஏன் பிரிகிறார்கள்??? இந்த கேள்விக்கான விடை இங்கே தான் இருக்கிறது.

"ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்"

நண்பர்களே,  இனி நான் என்னதான் விளக்கி சொன்னாலும் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகள் தான் முதல் மூலக்காரணங்கள். ஆனால் அது மட்டுமே காரணங்களும் இல்லை. சரி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.  கல்யாணத்திற்கு முன் கட்டை வண்டியில் மெதுவாக பயணம் செய்தவன், திடீர் என்று கனரக மோட்டார் வாகனத்தை அதிக சுமை ஏற்றி நெடுஞ்சாலையில் பயணம் செய்தல் எந்த அளவுக்கு பதற்றம் இருக்குமோ - அது தான் திருமண வாழ்க்கையிலும். இப்படி திடீர் என்று பாதை மாறி பயணிக்கும் சமயத்தில் நண்பர்களை மறப்பது ஒரு இயல்பான் விஷயம் தான். காரணம் அந்த சுகமான சுமை(மனைவி) இவனை மட்டுமே நம்பி தன் அணைத்து உறவுகளையும் உதறி விட்டு வருகிறாள். அப்படி வருபவளை சிறிது காலம் நிமிடம் கூட பிரியாமல் பார்த்து கொள்வது கணவனின் கடமை தானே. ஆயினும் நண்பர்களை மறப்பது தவறு தான். என்ன செய்வது மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளும் திடீர் திடீர் என்று வந்து எட்டிப்பார்ப்பதால், நண்பர்கள் சுத்தமாக மறக்கப்படுகிறார்கள். 

இப்படி பாசத்தை பகிர்ந்துக்கொள்ள மூன்றாவதாக(குழந்தை) ஒருவர் வரும் பொழுது தான், இவர்களின் இடையே கொஞ்சம் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியை மீண்டும் நிரப்ப இவன் தேடும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன். 

நண்பர்களே,  ஆகையால் இந்த தற்காலிக பிரிவை நினைத்து வருத்தப்படாமல், அந்த பிரிவையும் ஒரு சுகமான சுமையாக மாற்றிக்கொள்பவன் தான் உண்மையான நண்பன். 

ஏனென்றால், கல்யாணத்திற்கு பின் உங்களால் நிச்சயம் உங்கள் நண்பர்கள் தனிமை படுத்தப்படுவார்கள்,
ஆகையால் நீங்கள் புரிந்துக்கொண்டால், உங்கள் நண்பர்களும் புரிந்துக்கொள்வார்கள் அல்லவா!!!

இதோ இந்த உன்னதமான உறவுக்காக என் சிறிய கவிதையோடு முடிக்கிறேன்,

 அம்மாவின் அரவணைப்போடு,
 அப்பாவின் அதட்டலோடு,
அக்காவின் பாசத்தோடு,
அண்ணாவின் துணையோடு,
தங்கையின் வருடலோடு,
தம்பியின் துணையோடு,
வளர்ந்தான் ஒரு அனாதை சிறுவன்,  
தன் நண்பனோடு!!!

என்னவளை தேடி ஒரு பயணம்,



 என்னவளை தேடி ஒரு பயணம்,

நீரில் தேடினேன்,
முத்தாய் இருந்தால்,

நிலத்தில் தேடினேன்,
வைரமாய் இருந்தால்,

காற்றில் தேடினேன்,
தென்றலாய் இருந்தால்,

ஆகாயத்தில் தேடினேன்,
எல்லையற்றவளாய் இருந்தால்,

நெருப்பில் தேடினேன்,
சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்தால்,

அவள் முகம் பார்க்க என் மனக்கண்ணாடி ஏங்கிய சமயத்தில்,
எட்டிப்பார்த்தால் வெட்கத்துடன்,
என்னவள் அங்கே!!!

Thursday, April 28, 2011

கடன்

நண்பனிடம் கடன் கேட்டேன்,
கொடுத்தான்,
அவன் யாரிடம் கேட்டானோ???
மாதம் இறுதியில்....

Wednesday, April 27, 2011

எனது ஹைக்கூ - 1

 கல்யாண பத்திரிக்கை

மூடிய நிலையிலேயே இருக்க நினைத்தது,
எனது பெயர்,
காரணம் உனது பெயரை முத்தமிட்டுக்கொண்டே இருக்க!!!

மின்சார கட்டணம்

குளிர் சாதன அறையிலும்,
வியர்த்தது,
அடுத்த மாத மின்சார கட்டணத்தை நினைத்த பொழுது!!!


போக்குவரத்து சமிக்ஜை

நில்,
கவனி,
செல்,
எப்படி செல்வேன் என்னவள் அங்கே நிற்க!!! 

காகித பூ



யாருக்காக காத்திருக்கிறேன்,
பறித்தவன் எங்கே போனான்,
அவன் நெஞ்சில் பதிந்தவள் எங்கே போனாள்,
என்னை தனியே விடுத்து,

எவளோ ஒருத்திக்காக,
என்னை பறித்தான்,

காதல் சொல்லும் வேளையிலும்,
கையில் சின்னமாய் நான்,
கள்ளிக்காட்டு காதலுக்கும் நான்,
கடைத்தெரு காதலுக்கும் நான்,
கல்லூரி காதலுக்கும் நான்,
கல்யாணம் பின் காதலுக்கும் நான்,
கப்பல் மூழ்கிய காதலுக்கும் நான்,

ஆனால் வந்தபிறகோ எனது நிலை,
காய்ந்துப்போன காகித பூ தானோ!!!

Tuesday, April 26, 2011

எங்கள் வேர்வை துளிகள் எங்கே???



இதோ ஒரு வருட உழைப்பின் ஊதியம் கிடைக்குமா???
என்ற ஏக்கத்தில்,

உதிர்ந்த இந்த எழுத்துக்களை எனது சக நண்பர்களுக்கு ,
சமர்ப்பிக்கிறேன்,

கானல் நீர் வெறும் காட்சி பிழையாக இல்லாமல்,
எங்கள் வறண்ட தொண்டைக்கு தேனாக அமையுமா???

இதோ ஒரு வருட வெள்ளாமை முடிந்து,
விளைச்சல் சந்தைக்கும் வந்தாச்சு,
நல்ல விலைக்கு போகுமான்னு,
கவலையில நொந்து போன விவசாயிகள் (அட நாங்க தானுங்க),

 ஆமாங்க முடியாமதான் எழுதுறேன்,
என்னென்னு சொல்ல,
ஏதுன்னு சொல்ல,
கேட்டா உங்களுக்கே கண்ணீர் வரும்,
ஆனந்த கண்ணீர் இல்லங்க,
ரத்த கண்ணீர்!!!

கண்ணு ரெண்டும் அவுஞ்சுப்போச்சு- computer முன்னாடியே இருந்தா!!!
காது ஜவ்வு கிளிஞ்சுப்போச்சு - cell phone-அ காதுல இருந்து  எடுத்தாதான!!!
வாயி கோணலா மாறிப்போச்சு - Radio jacky-அ நாங்க!!!

Appraisee போட்டது 5,
Appraiser போட்டது 4,
Review-ல போட்டது 3,
Discussion-ல போட்டது 2,
HR போடுவாங்க 1,


ஆனாலும் சொல்லுவாங்க Outstanding-னு,
அதையும் கேட்டுக்கணும் காதுல பஞ்ச வெச்சுக்கிட்டு,

வழக்கம் போல எதிர்பார்ப்புடன் நாங்கள்,
ஏமாற்ற தயாராக அவர்கள்,
  
பார்க்கலாம் காத்திருங்கள்,
எனது அடுத்த மாத பதிப்பில் தெரியும்,
வென்றது,
எதிர்பார்ப்பா???
ஏமாற்றமா???

இதோ இந்த எழுச்சி வரிகளோடு முடிக்கிறேன்,

“Until victory always” -சேகுவேரா.......